ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார்.
எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும்.
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.