இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது.
இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும்.
பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.
சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.
வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.