திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.
மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும்.
முதன்முதலில் உலகம் தோன்றிய காலத்தில், அதில் மனிதர்கள், மற்ற ஜீவராசிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி திருமால் யோசித்தார். தனது யோக சக்தியால் பிரம்மதேவனை முதலில் உருவாக்கி, அவரிடம் படைக்கும் தொழிலை ஒப்படைத்தார்.
அதற்கு உதவ வேதங்கள், தேவ ரகசியம் ஆகியவை அடங்கிய பிரம்மச் சுவடிகளைக் கொடுத்தார். இந்தச் சுவடிகளைக்கொண்டு தனது பணிகளை பிரம்மதேவன் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் தன்னையறியாமல் சற்று கண்ணயர்ந்தார்.
அப்போது மது, கைடபர் என்கிற அரக்கர்கள் பிரம்ம தேவனிடமிருந்து பிரம்மச் சுவடிகளைத் திருடி, அதை கடல் நீருக்கடியில் மறைத்து வைத்துவிட்டனர். சுவடிகளைக் காணாமல் கலங்கிய பிரம்மதேவன், அதை மீட்க திருமாலிடம் வேண்டினார்.
மிக முக்கியச் சுவடிகள் காணாமல் போனதால், திருமால் வெண்குதிரை முகத்துடனும், மனித உடலுடனும் ஹயக்ரீவர் என்கிற அவதாரத்தை எடுத்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார்.