இனப் படுகொலைக்கு நீதி கேட்கும் உன்னத முயற்சி
, சனி, 29 ஜனவரி 2011 (16:11 IST)
இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் உறுதியான ஆதரவுடன் இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்த சாட்சிகளற்ற தமிழினப் படுகொலைப் போருக்கு நியாயம் தேடி தமிழினம் மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளுக்கு இடையே, ‘என்ன செய்யலாம் இதற்காக’ என்ற தலைப்பில் அந்தப் போரின் கொடூரங்களை நம் கண் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
மாமுயற்சி இது என்று பாராட்டினாலும், அந்த வார்த்தைகள் போதாது என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழத்தில் ‘வெற்றிகரமாக’ நடத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையை இன்று வரை உலகத்தின் ஒரு நாடு கூட அங்கீகரித்திராத நிலையில், இந்தப் படங்களின் தொகுப்பை பார்ப்போரிடம் - இது இனப் படுகொலை இல்லையென்றால், இதற்குப் பெயர்தான் என்ன? என்று எளிமையாக வினவலாம். மனிதாபிமானமுள்ள எந்த நெஞ்சத்தாலும் இதிலுள்ள அனைத்துப் படங்களையும் பார்த்து முடிக்க இயலாது. ஏனெனில் ஒன்று, அனைத்தையும் பார்க்கும் வலிமை அப்படிப்பட்ட மனிதாபிமான உள்ளங்களுக்கு இருக்காது அல்லது அந்தப் படங்களை பார்க்கும்போது கண்களில் சுரக்கும் கண்ணீர் மேற்கொண்டு பார்க்கவிடாது. ஆயினும் இது ஒரு சோகத்தின் தொகுப்பல்ல என்பதை ஒவ்வொரு படத்தின் கீழ் உள்ள வாசகங்களும் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. அந்த இடத்தில்தான் படங்கள் பேசியதை விட அந்த எழுத்துக்கள் பேசுகின்றன. அவை பல வினாக்களை எழுப்புகின்றன. அதில் 1956 முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள இனவெறி அரசுகளின் இனப் படுகொலைத் திட்டம் (Genocide intent) பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் (War Crimes) இழைக்கப்பட்டுள்ளது என்றும், போருக்கு பின் வன்னி முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crime against Humanity) என்றும், தான் காபாற்ற வேண்டிய மக்களையே கொன்றுக் குவித்த பொறுப்பற்ற அரசு (Responsibility to Protect) என்றும் ஐ.நா.வின் பல்வேறு பிரகடனங்களை சுட்டிக்காட்டி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்க அரசை உலக அளவில் பேசப்படும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் மீது குற்றங்களாக ஒவ்வொரு நாளும் சொல்லி வருகின்றன. ஆனால் ஒரு மனித உரிமை அமைப்பும் அங்கு நடந்தது திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு என்பதைச் சொல்லவில்லையே! ஐ.நா.வின் மிக முக்கியமான பன்னாட்டு பிரகடனம் (Convention on Crime and Punishment for Genocide) இனப் படுகொலைக்கு எதிரானது அல்லவா?