Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக வர்த்தக ஒப்பந்தம்: தோஹா சுற்றைத் துவக்க நாளை பேச்சு

Advertiesment
இந்தியா தோஹா சுற்றுப் பேச்சில் முட்டுக்கட்டை வேளாண் மானியங்கள் அமெரிக்கா
, வெள்ளி, 28 ஜனவரி 2011 (17:02 IST)
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் சந்தைகளை திறக்க வலியுறுத்தும் தோஹா சுற்றுப் பேச்சில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்க நாளை டெல்லியில் நடைபெறவுள்ள வர்த்தக அமைச்சகர்களின் மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கு தடையாக உள்ள சட்டங்களை தளர்த்துவது தொடர்பாக 2004ஆம் ஆண்டு தோஹா நகரில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கும், அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

மூன்றாவது உலக நாடுகளின் சந்தைகளை முழுமையாக திறந்துவிட வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் விரும்பினால், அவைகள் தங்கள் நாட்டின் வேளாண் உற்பத்திக்கு அளித்திடும் மானியங்களை குறைத்திட வேண்டும் என்று மூன்றாவது உலக நாடுகள் நிபந்தனை விதித்தன. அது மட்டுமின்றி, தங்கள் சந்தையை காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின. இதனை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளாததால் அந்த மாநாட்டில் முடிவு ஏதும் ஏற்படாமல் முடிந்தது. அந்த முட்டுக்கட்டை அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக நடந்த பல்வேறு மாநாடுகளிலும் தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பரில் தென் கொரியத் தலைநகர் சியோலில் நடந்த ஜி 20 மாநாட்டில் இந்த முட்டுக்கட்டையை உடைப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் நாளை டெல்லியில் அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் உட்பட முக்கிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை சுவிட்சர்லாந்து நாடு கூட்டுகிறது. இதில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் பாஸ்கல் லாமி கலந்துகொள்கிறார்.

ஜி20 மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு இணங்க எந்த அளவிற்கு தோஹா சுற்றில் ஏற்பட்ட முட்டுக்கட்டை உடைத்து மேற்கொண்டு பேச முடியும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில், ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil