மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மற்றும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மூளைக்கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
மொபைல் போன் அல்லது கார்ட்லெஸ் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில்,தற்போது இந்தியாவின் குர்காவ் நகரில் உள்ள ஏபிஜே பொறியியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்.பி. துபே மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள், மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால், அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்க அலைகளால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில்,மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வெளிப்படும் கதிரியக்க அலைகளின் அளவு, உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துவதாக உள்ளது தெரியவந்துள்ளதாக துபே தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் மொபைல் போன் அல்லது கார்ட்லெஸ்,அதாவது கம்பிவடமற்ற போனை பயன்படுத்தினால் மூளை கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக சில ஆராய்ச்சிகள் முன்னர் தெரிவித்திருந்தபோதிலும்,மற்ற பல ஆராய்ச்சிகள் அது குறித்து எதுவும் தெரிவிக்காமல்தான் இருந்தன.
துபேவைப் போன்றே, ஸ்வீடனைச் சேர்ந்த புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஹார்டெல் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்,பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக செல்போனை பயன்படுத்திய பல புற்று நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுக்கு பின்னர் நீண்ட நேரம் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை கட்டி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது உண்மைதான் என்று தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
பல்வேறு ஆய்வுகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்கள் மூலம், நீண்ட காலம் மொபைல்போனை பயன்படுத்தினால் நரம்பு புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்து இருமடங்கு அதிகரிப்பதாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அதேப்போன்று மொபைல் போனை காதின் ஒரே பக்கம் வைத்து நீண்ட நேரம் பேசுவதினால் மூளை கட்டி நோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் உள்ளதாக தங்களது ஆய்வறிக்கையில் எழுதியுள்ளனர்.
அதே சமயம் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் நுண்ணிய கதிரியக்க அலைகள், மூளை புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்த தெளிவாக விளக்கப்படவில்லை.ஆனாலும் பொபைல் போன் இழுக்கும் 'சிக்னல்' மண்டையோட்டில் இரண்டு இன்ச் அளவுக்கு உள்ளிழுக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இளம் வயதினர்தான் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதாலும், குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும்போது,அவர்களது மூளைக்குள் போன் சிக்னல்கள் அதிவேகமாக ஊடுருவும் என்பதாலும் பெற்றோர்கள்தான் இது விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் அறிவுரை!