Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருப்பது ஒரு பூமி… இதுவும் இல்லையென்றால்..? – World Earth Day!

Advertiesment
World Earth Day
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:43 IST)
உலக பூமி தினமான இன்று நாம் வாழும் இந்த உலகம் குறித்தும், இந்த உலகை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிந்து கொள்வோம்.

பிரபஞ்சத்தில் எவ்வளவோ கோடி நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன்கள் உள்ளன. சூரியன்களை சுற்றி பல கோள்களும் சுற்றி வருகின்றன. ஆனால் சரியான தூரத்தில் சரியான வேகத்தில் சுற்றிவரும், தேவையான அனைத்து இயற்கை சூழலும் அமையும் கோள்கள் மட்டுமே உயிரினங்கள் வாழ தகுந்தனவாக உள்ளன.

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை ஆராய்ந்து வந்தாலும் இதுவரை உயிரினங்கள் உள்ள எந்த கோளையும் காண முடியவில்லை. ஒன்றை தவிர. அதுதான் பூமி. பூமியில் உயிரினங்கள் உருவாக பல கோடி ஆண்டுகள் பிடித்தது. அதன் பின்னர் உயிரினங்கள் பெருகி பரிணாமம் அடைந்து மனிதன் உருவாகி இந்த தொழில்நுட்பங்களை கண்டறிய பல கோடி ஆண்டுகள் பிடித்தது.

இப்படி பல கோடி ஆண்டுகளாக உருவான பூமியை சில நூறு ஆண்டுகளில் அழிக்கும் பணியை மனிதர்களாகிய நாம் செய்து வருகிறோம். தற்போதைய உலகில் காற்று, நீர், நிலம் என மனிதன் வாழ அவசியமான அனைத்து இயற்கை மூலமும் மாசுபட்டு வருகிறது.

பூமியை சுற்றி இருக்கும் வாயு மண்டலம் ஒரு காற்று குமிழ் போலதான்! பூமிக்குள் நாம் ஏற்படுத்தும் அனைத்து மாசுக்களும் இந்த வளிமண்டலத்திற்குள்ளேயேதான் இருக்கும் எனும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகளும் இந்த வளிமண்டலத்தினுள்ளே நம்மோடேதான் இருக்க போகிறது.

கடந்த பல ஆண்டுகளாக நாம் செய்து வந்த மாசுபாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பூமியும் உலக வெப்பமயமாதல் என்ற அபாயத்தை அடைந்துவிட்டது. ஆர்டிக், அண்டார்டிக் கடல் பனிப்பாறைகள், க்ரீன்லாந்தில் உள்ள பனி படுக்கைகள் மட்டுமல்லாது இமயமலையின் பனிப்பாறைகளும் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக உருகி வருகின்றன.

இவ்வாறாக பனிப்பாறைகள் உருகுவது தொடர்ந்தால் கடல் நீர் மட்டம் உயரும். அவ்வாறாக உயரும் கடல் நீர் மட்டத்தால் கடலோர நகரங்கள் பல நீரில் மூழ்கும், கடல் நீர் உட்புகும். இதனால் விவசாயம் உள்ளிட்ட மக்களின் உணவுத்தேவையை தீர்க்கும் வழிமுறைகள் பாதிக்கப்படும். இது மட்டுமல்லாமல் உலக வெப்பமயமாதல் எல் நினோ உள்ளிட்ட கடுமையான காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு நம்மை தள்ளியுள்ளது.

உலக வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் குறித்து கடந்த பல ஆண்டுகளாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கங்களும், தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நம்மை போற்றி வளர்த்த இந்த பூமியை அதன் இயற்கையை காப்பதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்?

பெரிய அளவில் ஏதும் செய்யாவிட்டாலும் நாம் வளர்க்கும் ஒவ்வொரு சின்ன செடியும், மரமும் கூட நமக்காக இயற்கையை காக்கும் பணியை செய்யும். அதனால்தான் காலம் சென்ற முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மரம் வளர்ப்பதை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். இயற்கையின் தூதுவனான மரங்களை அதிக அளவு வளர்ப்பதன் மூலம் பூமியில் நமது சந்ததிகள் வாழ்வதற்கான காலத்தை மேலும் சில ஆண்டுகள் நம்மால் நீடிக்க முடியும்.

உலக பூமி தினத்தின் 50வது ஆண்டான இன்று மரம் வளர்ப்பதையும், இயற்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டையும் குறைக்க நம்மாலான முதல் படியை எடுத்து வைப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு சதியால் பதவி இழந்தேன்: இம்ரான்கான்