சென்னையில் கார் உற்பத்தி ஆலையை வைத்திருந்த ஃபோர்டு நிறுவனம் அதை விற்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கார் தயாரிப்பை தொடங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை சென்னையில் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஃபோர்டு கார்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல், பல வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சில காலம் முன்னதாக தொழிலில் ஏற்பட்டு வரும் பின்னடைவு காரணமாக சென்னையில் உள்ள ஆலையை விற்க உள்ளதாக ஃபோர்டு தெரிவித்திருந்தது.
மேலும் மொத்தமாக இந்தியாவிலே தனது விற்பனையை ஃபோர்டு நிறுத்திக் கொள்ள உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஃபோர்டு தற்போது விற்பனை செய்து வரும் எவரெஸ்ட் மாடல் கார்களுக்கு காப்புரிமை கோரியுள்ளது. மேலும் சென்னை ஆலையை விற்கும் முடிவையும் மாற்றிக் கொண்டுள்ளது.
இதனால் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாக விற்பனையாகும் தனது எவரெஸ்ட் மாடல் கார்களை இந்தியாவிலும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறாக இந்த எவரெஸ்ட் மாடல் கார்கள் இந்தியாவில் அறிமுகமானால் அது தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சுனர் மாடல் கார்களுக்கு போட்டியாக அமையும் வகையில் சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.