வருகிற 9-ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்தும் வகையில் ஜனவரி 3ஆம் தேதி இரண்டாவது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் சிஐடியூ, ஏஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 30 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 9 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது.