Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரியார் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை': பினாங்கு ராமசாமி

Advertiesment
பெரியார் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை': பினாங்கு ராமசாமி
, புதன், 22 ஜனவரி 2020 (21:49 IST)
சதீஷ் பார்த்திபன்
 
தமிழ், தமிழர்களின் வரலாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த் தேவையற்ற விஷயங்களைப் பேசி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்வதாக மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பேராசிரியர் ராமசாமி.
 
அண்மையில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ரஜினி தெரிவித்த சில கருத்துகளுக்காக அவரை குற்றவாளி எனச் சாட இயலாது என்றபோதிலும், தமிழர்களின் கலாசாரம், வழக்கம் மற்றும் மரபுகள் ஆகியவற்றைத் தொடும் விஷயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்ப்பது நல்லது என்றார் ராமசாமி.
 
கேள்வி: பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான ஊடகச் செய்தியை எடுத்துச் சொல்லி ரஜினி தன் கருத்தைச் சொல்ல முற்பட்டது தவறா?
 
பதில்: கருத்து தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ராமர் சிலை மீது காலணிகள் வீசப்பட்டதாகக் கூறுகிறார் ரஜினி. அதே காலகட்டத்தில் பெரியார் மீதும் எத்தனையோ தாக்குதல்கள் நடந்துள்ளன. அதை மறுக்க இயலுமா? அது குறித்து ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை?
 
தமிழன் உருப்பட வேண்டும், சாதிகள் ஒழிய வேண்டும், பிராமண ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் பெரியார் என்பதுதான் வரலாறு. ரஜினி ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை? மக்களுக்காக பெரியார் எவ்வளவோ போராட்டங்களை நடத்தினார். ரஜினி அதுபோன்று தொடர்ந்து போராடியுள்ளாரா?
 
கேள்வி: ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
பதில்: அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. அண்மைய நிகழ்வில் அவர் பெரியார் குறித்துப் பேசிவிட்டதால் அவரைக் குற்றவாளி என்று சொல்வதற்கில்லை. அதேசமயம் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ரஜினி புரிந்து, தெரிந்து கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
 
திராவிட வரலாறு குறித்தெல்லாம் ஏதும் தெரிந்து கொள்ளாமல் தேவையற்ற விஷயங்களைப் பேசி ரஜினி தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்.
 
தந்தை பெரியாரின் கொள்கைகள் சிலவற்றை இப்போதும் கூட நான் ஏற்பதில்லை. அதேசமயம் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும், மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதே பெரியாரின் முதன்மை விருப்பமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது. அவர் பல உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தார்.
 
அவரது இந்த எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த 1971ஆம் ஆண்டு நிகழ்வும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பான செய்தி த இந்து நாளேட்டில் வெளிவந்தது.
 
கேள்வி: சில விவகாரங்கள் தொடர்பாக ரஜினி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாகின்றன. அதற்காக கருத்தே சொல்லாமல் மௌனம் காக்க வேண்டும் என்பது சரியா?
 
பதில்: யாரும் அப்படிச் சொல்லவில்லை. ரஜினி அடிப்படையில் ஒரு நடிகர். ஏற்கெனவே அவர் தெரிவித்த சில கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சில கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது.
 
தொழில்முறை நடிகரான அவர் ஒன்று தன் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது முழு நேர அரசியலுக்கு வர வேண்டும். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றிருக்கக் கூடாது.
 
பதில்: ரஜினி திரையுலகில் நல்ல நடிகர். பல வெற்றிகளைக் கண்டவர். அவர் அதே துறையில் நீடிப்பது நல்லது. மாறாக எதுகுறித்தும் விரிவாக தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.
 
முதலில் ஆன்மீக அரசியல் குறித்துப் பேசியவர், அதிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்பட்டது. பாஜக இந்தியாவில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி நல்ல தலைவராக செயல்பட்டு வருகிறார்.
 
எனினும் அந்தக் கட்சி தமிழகத்தில் வலுவாகக் காலூன்றுவது அவ்வளவு சுலபம் அல்ல. அது மட்டுமல்லாமல் ரஜினியை நம்பி தமிழகத்தில் பாரதிய ஜனதா களமிறங்கினால் மிகப்பெரும் தோல்வியைச் சந்திக்கும்.
 
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டுமானால் ஒரு தமிழரை நம்பிக் களமிறங்க வேண்டும். மாறாக ரஜினியை முன்னிறுத்துவது சரியல்ல.
 
ரஜினியைப் போன்றவர்களுக்கு பெரியார் போன்றவர்களுடைய அருமை தெரியாது. திராவிடக் கட்சிகள் வேண்டுமானால் திசைமாறிப் போயிருக்கலாம். ஆனால் திராவிட சித்தாந்தம் என்பது தமிழர்களுக்கு நிச்சயம் தேவை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி-பெரியார் சர்ச்சை : மீண்டும் மறு பிரசுரம் செய்யப்படும் 1971ஆம் ஆண்டு துக்ளக் கட்டுரை