தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் முடியும் முன்னரே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் கேரளா தொடங்கி அரபிக்கடலோர மாநிலங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவக்காலங்களில் அரபிக்கடலில் புயல் சின்னங்கள் உருவாவது வழக்கம்.
அதேசமயம் அரிதாக வங்கக்கடலிலும் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது. அவ்வாறாக இன்று மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கோடை மழை இயல்பு அளவான 11 செ.மீ பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டில் 22 செ.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. கோடைக்காலமே தெரியாத அளவிற்கு வழக்கத்தை விட 95 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவக்காற்றிலும் தமிழகத்தில் மழைப்பொழிவு கண்டு வருவதால், வடகிழக்கு பருவமழையில் இன்னும் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K