கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இது 2015 ஆண்டிற்கு பிறகு பெய்யும் அதீத கனமழை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழைவெள்ளம் மீண்டும் அரசு அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்து உள்ளது.பாதி நாட்கள் தண்ணீருக்காகவும் மீதி நாட்கள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நீர் வழி பாதைகளில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்றும் வெள்ளம் வடிவதற்கு வசதியாக நீர்வழி தடங்களை பராமரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை மழை வெள்ளம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள தலைமை நீதியரசர் இது குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். அதில் 2015 வெள்ளத்துக்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த நிலைமை ஒரு வாரத்திற்குள் சீராகும் என நம்புவதாகவும் இல்லை என்றால் தானாக முன்வந்து வழக்கு தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருடம் வருடம் இதே நிலைமை தான் தொடர்கிறது.. ஆட்சி தான் மாறுகிறது, காட்சி மாறவில்லை. ஒரு வாரத்திற்குள் வெள்ள நிலைமை சீராகவில்லை எனில் அரசு மீது வழக்கு பதியப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.