ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு பள்ளிகள் அவல நிலையில் இருப்பதாகவும், அந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொறுப்பற்ற நிலையில் இருப்பதாகவும், மாணவர்கள் ரவுடிகளாக மாறுவதாகவும் அந்த படத்தில் சில காட்சிகள் உள்ளன. ராட்சசி படத்தில் கூறியது போல் உண்மையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் அவ்வாறு அவல நிலையில் தான் உள்ளதா? என்றால் அது ஒரு கேள்விக்குறிதான்
ராட்சசி படத்தில் கூறியது போல் ஒருசில பள்ளிகள் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகளாக மாறி வருகின்றன. பல அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த முயற்சியால் அரசுப் பள்ளிகளை நவீனப் படுத்தி வருகின்றனர். முன்னாள் மாணவர்கள் பலரும் தாங்கள் படித்த அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி செய்து நவீனமயமாக்க உதவி செய்து வருகின்றனர். இதன் காரணமாக கலெக்டர் உள்பட பல அரசு மேலதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது
இந்த நிலையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில், தனியார் பள்ளிக்கு இணையாக அறிவியல் ஆய்வகம், எல்.இ.டி திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள், சிசிடிவி கேமரா உள்பட பல வசதிகள் அந்த பள்ளியில் உள்ளது. மேலும் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு பயிற்சி, நூலக வசதி, யோகா, கராத்தே, நடன வகுப்புகள் போன்ற வசதிகள் இந்த பள்ளியில் உள்ளன. மேலும் இந்த ஆண்டு முதல் இந்த பள்ளியில் எல்கேஜி, யுகேஜி ஆங்கில வழி வகுப்புகளும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு பள்ளிகள் தற்போது நவீனமயமாகி வரும் நிலையில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் மோசமாக இருப்பது போன்று ராட்சசி' படத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை வருத்தமடைய செய்திருப்பது என்பது உண்மைதான்