பெரம்பலூர் அரசு பள்ளியில், எச்.ஐ.வி. பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க முடியாது என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார்.
எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வை, தமிழக அரசு தமிழகத்தில் ஏற்படுத்தி வந்தாலும், பல இடங்களில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதராக எண்ணும் வழக்கம்,பெரும்பான்மையான மக்களிடம் இல்லை. முக்கியமாக எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் தனியாக அமரவைக்கு கொடுமைகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவரை பள்ளியில் சேர்க்க, பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை அறிந்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன், தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தார். இதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை 4 வாரத்திற்குள் விளக்கத்தை அளிக்குமாறு உத்தரவு அளித்துள்ளது. மேலும் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய கல்வியையும் பாதுகாப்பையும் அளிக்குமாறு பல சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.