டீச்சர் ஜோதிகாவின் அதிரடி ஆக்சனில் "ராட்சசி" - திரைவிமர்சனம்

வெள்ளி, 5 ஜூலை 2019 (14:36 IST)
தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதோடு அதில் தொடர்ச்சியான வெற்றிகளை கொடுத்து வருகிறார். பெண்களின் சுதந்திரம் சமூக அக்கறை என ஹீரோவுக்கு நிகராக தன்னை வெளிப்படுத்தி மாஸ் காட்டி வருகிறார். 
 

 
அந்தவகையில் தற்போது அவர் பள்ளி குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்ற வகையில் ஒரு  வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவரின் நடிப்பு இதில் பாராட்டப்படுகிறதா என்பதை இங்கே இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். 
 
படம்: ராட்சசி 
இயக்கம்: கெளதம் ராஜ்
இசை: சான் ரோல்டன் 
தயாரிப்பு:எஸ் ஆர் பிரபு
நடிப்பு: ஜோதிகா , ஹரீஷ் பேராடி, பூர்ணிமா பாக்யராஜ் , சத்யன் மற்றும் பலர் 
 
 
கதைக்கரு:  
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் "ராட்சசி" இப்படத்தில் ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். இந்த பள்ளிக்கு ஒரு சின்சியரான தலைமை ஆசிரியராக நடிகை ஜோதிகா படமுழுக்க கைதட்டல் வாங்குகிறார். சீர்குலைகுலைந்த பள்ளி , ஒழுக்கமற்ற மாணவர்கள், மோசமான ஆசிரியர்கள் ,  பொறுப்பில்லாத பெற்றோர்கள் என அத்தனையும் அதிரடி தலைமை ஆசிரியையாக வந்திறங்கி அது அத்தனைத்தையும் மாற்றி அமைக்கிறார் கீதா ராணி (ஜோதிகா)
 
சீர்குலைந்து கிடக்கும் பள்ளியை கண்டு அதிரடியாக களத்தில் இறங்கி வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். பெற்றோர்களை பொறுப்போடு இருக்க சொல்வதோடு மாணவர்களையும் ஒழுக்கமானவர்களாக மாற்றுகிறார். இதனால் தனியார் பள்ளியின் கரெஸ்பாண்டென்ட்  ஜோதிகாவின் வேலைக்கு குழி தோண்டுகிறார். ஆனால் அதையெல்லாம் மீறி ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியை கீதா ராணி (ஜோதிகா) எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை.   
 
கதைக்களம்: 
 
ஜோதிகா பெரும் பதவியில் இருந்து கைநிறைய சம்பளம் வாங்கியும் அவருக்கு அதில் திருப்தி இல்லாமல் அரசு பள்ளியில் ஒரு அரசு பள்ளி டீச்சராக வேலை பார்க்க துவங்குகிறார். ஆனால் ஆனால், அந்த பள்ளிக்கூடத்தில் எதுவுமே சரியில்லை, இதயெல்லாம் கண்டு எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்ட அந்த பள்ளி மிரண்டு போகிறது. 
 
பின்னர் , மோசமான ஆசிரியர்களை மிரட்டி , மாணவர்களை அதட்டி , பெற்றோர்களை ஒழுங்கு படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார். இதனை கண்டு   தனியார் பள்ளி  நடத்தும் ராஜலிங்கம் ஆதங்கம் அடைய (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார்.     
 
மேலும் சக ஆசிரியர்களும்  'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை.
 
படத்தின் ப்ளஸ்: 
 
'காக்க காக்க' மாயா டீச்சரை தொடர்ந்து ராட்சசி கீதா ராணி ஜோதிகாவின் நடிப்பில் அற்புதம். ஸ்டிரிக்ட் தலைமை ஆசிரியர், திறமையான ராணுவ அதிகாரி, அன்பான மகள், காதலின் வலியை மனதில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண பெண் என பல பரிமாணங்களை ஒரே படத்தில் காட்டியிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி
 
அந்த அளவிற்கு ஆசிரியை கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ்.  ", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்", போன்ற சாட்டையடி வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. நல்ல சமூக அக்கையுள்ள வசங்களை படத்தில் இடபெறச்செய்த கவுதம்ராஜும், பாரதி தம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை படத்தில் வெளிப்பட்டுள்ளது. 
 
பூர்ணிமா பாக்யராஜ். ஹரீஷ் பிதாரியும், கவிதா பாரதியும் வில்லன் ரோலுக்கு கச்சிதம். பள்ளி இண்டர்வெல் பிரேக் போல், அவ்வப்போது வந்து சிரிப்புகாட்டிவிட்டு போகிறார் பிடி மாஸ்டர் சத்யன். ஜோதிகாவின் அப்பா இறக்கும் காட்சியில் பின்னால் ஒலிக்கும் இசை கல் மனதையும் கரைத்துவிடுகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு கொடுக்கும் அத்தனை பில்டப் பீட்சையும் ஜோவுக்காக ஒலிக்க விட்டிருக்கிறார்.
 
படத்தின் மைனஸ்: 
 
படத்தின் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் ஒத்துப்போகாமல் வேறுபட்டு காணப்படுகிறது. பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம் இசையமைப்பாளர் சியன் ரோல்டன். 
 
இறுதி அலசல்:
 
அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, குறைந்த கல்விக்கட்டணத்தில் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. அதனை தனது நடிப்பின் மூலம் எடுத்துரைத்து அனைவரரும் ராட்சசியை ரசிக்கும்படி செய்துவிட்டார் ஜோதிகா. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ராதிகா, சரத்குமார் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – கைதாக வாய்ப்பு ?