நிலச்சரிவால் வயநாடு மாவட்டம் பேரழிவை சந்தித்துள்ள நிலையில், பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 152 பேரின் நிலை தெரியவில்லை. ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்து கேரள சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி மற்றும் நிலச்சரிவில் உயிர்பிழைத்த, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளைக் கருத்தில் கொண்டு ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
மாவட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திட்டமிடப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் அதேபோல, சாம்பியன்ஸ் படகு லீக் போட்டி நடத்துவதையும் அரசு கைவிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மக்கள் தங்களது வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடலாம் என்றும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.