சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு பட்டம் பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி ஹானர்ஸ் பட்டப்படிப்புக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின்(என்.ஆர்.ஐ) கீழ் முறைகேடாக ஆவணங்கள் இன்றி ஜெயா டிவியின் சிஇஓ, ஜாஸ் சினிமாஸின் சிஇஒ விவேக் ஜெயராமன் சீட் பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
2015ம் ஆண்டு மூன்றாண்டு எல்.எல்பி ஹானர்ஸ் படிப்பில் வெளி நாட்டு இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமன் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்திய தூதரகத்தின் சான்றிதழ், வங்கி கணக்கு, உறுதி சான்றிதழ், தகுதி சான்றிதழ் என அதற்கான ஆதாரங்கள் எதுவுமே அவரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதோடு, விவேக் ஜெயராமன் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, துணைவேந்தர் வணங்காமுடியின் அறையில்தான் அமர்ந்து தேர்வே எழுதுவார். சக மாணவர்களோடு அல்ல எனவும் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறி வருகின்றனர்.