நாதெள்ளா சம்பத் நகைக்கடை ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக சிபிஐ-யிடம் எஸ்.பி.ஐ வங்கி புகார் அளித்துள்ளது.
சென்னயை சேர்ந்த கனிஷ்க் நகைக்கடை தொழில் அதிபர் பூபேஷ்குமார் போலி ஆவணங்களை தாக்கல் செய்து வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த விவகாரம் சமீபத்தில் வெளிவந்தது. இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி சிபிஐ-யிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளது. தற்போது அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனமும் கடந்த 2010ம் ஆண்டு, போலி ஆவணங்களை காட்டி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டே எஸ்.பி.ஐ வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
நாதெள்ளா சம்பத் பல ஆயிரம் மக்களிடம் நகைச் சீட்டு நடத்தி ரூ.75 கோடி பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததாக ஏற்கனவே அக்கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அந்த நகைக்கடையின் கிளைகள் மூடப்பட்டன.
இப்படி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் நகைக்கடைகளுக்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ந்து கடன் கொடுத்து ஏமாந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.