பிரதமரை சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் ஆகியோர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் : விகடன் இணையதளம் முடக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்காவில் இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்தும், ட்ரம்ப் முன் மோடி மௌனம் காத்ததை அம்பலப்படுத்தும் ஒரு கார்ட்டூன் காரணமாக விகடன் தடைசெய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசுவோம். இந்தத் தாக்குதலுக்கு எதிராக உறுதியாக நிற்போம்."
கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் : இந்தியர்களைக் கை, கால்களில் விலங்கிட்டு போர்விமானத்தில் அழைத்து வந்த அமெரிக்க நிர்வாகத்தை கண்டிக்காமல் கோழைத்தனமாக நடந்துகொண்டது மோடி நிர்வாகம். இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் விகடனில் வெளிவந்துள்ள கேலிச்சித்திரத்திற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. தன் குடிமக்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று அமெரிக்காவை கேட்கத் துணிவற்றவர்கள், தன் நாட்டில் உள்ள அனைவரும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நடக்க மறுப்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுகிறார்கள். விகடனின் மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்