கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று வந்தனர். நேற்று, உயிரிழந்த 41 குடும்பங்களில் 39 குடும்பங்களின் வங்கி கணக்கில் தலா ரூ.20 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுவிட்டது. இது குறித்த கடிதத்தையும் விஜய் எழுதியிருந்தார்.
மீதமுள்ள இரண்டு குடும்பங்களில் யாரிடம் நிதி வழங்குவது என்று குடும்பத்தினரிடையே சிக்கல் நிலவுவதால், விரைவில் யாரிடம் வழங்கப்படுவது என்பது குறித்து முடிவு செய்து உரிய நபரிடம் நிதி அளிக்கப்படும் என்று தமிழக வெற்றி கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், காயம் அடைந்தவர்களுக்கும் விரைவில் ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கியிருந்தது. மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் தலா ரூ.1 லட்சம் ரூபாயும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.