தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அவரது வருகைக்காக, திருச்சி விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 10:30 மணியளவில் மரக்கடையில் பிரசாரம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விஜய்யின் வாகனம் தொண்டர்களின் கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வந்த அவர், தனக்காக வடிவமைக்கப்பட்ட பிரசார வாகனத்தில் மரக்கடை நோக்கிப் புறப்பட்டார்.
விமான நிலையத்திலிருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் நிரம்பி வழிந்ததால், வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை. காவல்துறையினர் 10:30 மணிக்குள் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தனர். ஆனால், நெரிசல் காரணமாக பிரசாரப் பயணம் தாமதமானது.
விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து 5 கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பின்தொடர்ந்ததால், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.