சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஃபோன் 17 மாடலை அறிமுகம் செய்த நிலையில், அதன் நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் விலை உயர்ந்த ஆப்பிள் ஐஃபோன் மாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு ஐஃபோன் மாடல் வெளியாகும்போதும் அதை கடைகளில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு பலர் ஐஃபோன் பிரியர்களாக உள்ளனர். இந்நிலையில்தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐஃபோன் 17 சிரிஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவன பங்குகள் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேர்மாறாக சரிவை நோக்கி சென்றுள்ளது. புதிதாக வெளியான ஐஃபோன் 17 மாடலில் முந்தைய 16 மாடலை விட பெரிய அப்டேட்டுகள், புதிய வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. சமீப மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் பெரிதாக எந்த வசதிகளையும் செய்யாமல் சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்து புதிய மாடலாக வெளியிடுவதாக பயனாளர்கள் பலர் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஐஃபோன் 17 வெளியீட்டிற்கு பிறகு இந்த கிண்டல், கேலி அதிகமான நிலையில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் வாங்குவதற்கு பலரும் தயாராக இல்லாத நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக 240 டாலர்கள் உயரத்தில் இருந்த பங்கு விலை கிடுகிடுவென வீழ்ந்து 226 டாலர்களானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பங்குகள் விலை வீழ்ச்சியடைவதும் உயர்வதும் இயல்புதான் என்றும், வரும் வாரத் தொடக்கத்தில் ஆப்பிள் பங்குகள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Edit by Prasanth.K