Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய்” - தமிழிசை விமர்சனம்.!!

Tamilasai

Senthil Velan

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (14:36 IST)
நடிகர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசி கொண்டுள்ளார் என்றும் தமிழ்நாட்டில் திமுக சாயலில் இன்னொரு கட்சி தேவை இல்லை என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி துரைசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிழிசை, தமிழக பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பாக மூன்றாவது முறையாக தேசத்தை வலிமையாக வழிநடத்தும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணி 100 நாட்களைக் கடந்து சிறப்பான ஆட்சியை இந்தியாவிற்கு வழங்கி வருகிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். 
 
மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசு கூறுவதாகவும், ஆனால் உலகத்திலேயே சிறந்த துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது எனவும் தூத்துக்குடி துறைமுகத்தின் தரத்தை உயர்த்திய பிரதமர் மோடிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நன்றி கூட தெரிவிக்கவில்லை எனவும் தமிழிசை குறிப்பிட்டார்.
 
இப்போது வரும் சினிமா படங்கள் 3 நாட்கள் ஓடி விட்டது என்று விளம்பரம் செய்யக்கூடிய நிலையில் 100 நாட்கள் பிரதமர் சிறப்பான ஆட்சியை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவும், பாரத தேசத்தின் ஹீரோவாக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
சிறுத்தையாக ஆரம்பித்த திருமாவளவன் கடைசியில் சிறுத்துப் போய் இருக்கிறார் என அவர் விமர்சித்தார். ஆட்சியில் பங்கு கேட்போம் என ஒரு வீடியோவை பரவ விட்டுவிட்டு பின் நான் போடவில்லை அட்மின் தான் போட்டார் என சினிமா போல நாடகத்தை நடத்தி வருகிறார் என்று தமிழிசை கூறினார்.
 
முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் சிறுத்து போகிவிட்டார் என்றும் திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு மதுவிலக்கை பற்றி எப்படி பேச முடியும் என்றும் திருமாவளவனின் மதுவிலக்கு மாநாட்டிற்கு டாஸ்மாக் நடத்துபவர்கள் தான் ஸ்பான்சர்களாக  இருக்கிறார்கள் என்றும் தமிழிசை விமர்சித்தார். திருமாவளவனின் மதுவிலக்கு மாநாடு தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அவர் கூறினார். 

திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை என்றும் தமிழ்நாட்டில் தேசிய சாயலில்தான்  கட்சி வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விஜய் வேற்றுப் பாதையில் பயணிப்பாரென நினைத்துக் கொண்டிருந்தேன் என தெரிவித்த தமிழிசை,  ஆனால் நான் இப்படித்தான் என விஜய் காட்டிவிட்டதாகவும்  திமுக பாதையில் திராவிட சாயலை விஜய் சாயமாக பூசிக் கொண்டார் எனவும் விமர்சித்தார்.  சாயம் வெளுகிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசி கொள்வாரா என்பது போகப் போக தான் தெரியும் என்று அவர் கூறினார்.

 
ஒரு திரைப்படத்தை திரையிட விடவில்லை, ஒரு மாநாட்டை நடத்த விட மறுக்கிறார்கள், தேசிய பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம் என்றும் ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!