தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம், இரட்டைப்போர் யானை மற்றும் வாகை மலர் குறித்து கட்சியின் தலைவர் விஜய் விளக்கியுள்ளார்.
சிவப்பு என்றாலே புரட்சிகரமான நிறம், அதனால் எல்லோர் கவனத்தையும் கவரும் என்பதால் சிவப்பு நிறத்தை தேர்வு செய்தோம். மஞ்சள் நிறமென்பது நம்பிக்கை, லட்சியம், உற்சாகம், நினைவாற்றல், இலக்கை நோக்கி உறுதியுடன் ஓட வைக்கும் எண்ணம் ஆகியவை காரணமாக இந்த இரண்டு நிறங்களை தேர்வு செய்தோம்.
வாகை மலர் என்பது வெற்றியின் மலர். போருக்கு போய்விட்டு மன்னன் திரும்பும் போது வாகை சூடி வந்தான் என்று சொல்வார்கள். அதனால் வெற்றி என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் வாகை மலரை தேர்வு செய்தோம்.
பொதுவாக பலம் குறித்து சொல்ல வேண்டுமென்றால் யானை பலம் என்று சொல்வார்கள். குணத்தில், உருவத்தில், உயரத்தில், எப்போதுமே தனித்தன்மை கொண்டது யானை. அதிலும் குறிப்பாக போர் யானை என்பது தன்னிகரற்றது. போர் பழகிய யானை எதிரிகளை துவம்சம் செய்வதில் கில்லாடி. அப்படிப்பட்ட போர்முனையில் இருக்கும் பலமான இரட்டை யானையை எங்கள் கட்சியின் கொடியில் வைத்து உள்ளோம் என்று விஜய் தனது கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் யானை, வாகை மலருக்கு விளக்கம் அளித்துள்ளார்