Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி பேராசிரியர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகும் ‘க. மு - க. பி’

கல்லூரி பேராசிரியர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகும் ‘க. மு - க. பி’

J.Durai

, வியாழன், 24 அக்டோபர் 2024 (07:52 IST)
பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு - க. பி’ (கல்யாணத்திற்கு முன் - கல்யாணத்திற்கு பின்). 
 
கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே இதுவரை 7 குறும்படங்களை இயக்கியுள்ள புஷ்பநாதன் ஆறுமுகம், காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கிய காவல் தெய்வம்  குறும்படம் 58 திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 26 விருதுகளை பல்வேறு பிரிவுகளில் வென்றுள்ளது. 
 
அது மட்டுமல்ல இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளியான மகாராஜா மற்றும் கொட்டேஷன் கேங் ஆகிய படங்களில்  உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட புஷ்பநாதன் ஆறுமுகம் சில விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார்
 
டாணாக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விக்னேஷ் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். சரண்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த டிஎஸ்கே இந்த படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  
 
மேலும் சின்னத்திரை புகழ் பிரியதர்ஷினி,  கபாலி பெருமாள், அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.
 
படத்தின் ஒளிப்பதிவை ஜி எம் சுந்தர் கவனித்துள்ளார். இவர் மகாராஜா, லப்பர் பந்து ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான தினேஷ் புருஷோத்தமனின் சிஷ்யர். இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் பணியாற்றிய தர்ஷன் ரவிக்குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாலு மகேந்திராவின் மாணவரான சிவராஜ் பரமேஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். 
 
படம் குறித்து இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம் கூறும்போது....
 
எப்போதும் காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் அவர்களது குறை நிறைகள் தெரியாது. பிளஸ் மட்டுமே தெரியும். ஈர்ப்புணர்வும் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு சேர்ந்து இருக்கும் நேரம் அதிகம் என்பதால் அவர்களின் நிஜமான குணங்கள் தெரிய ஆரம்பிக்கும். பொருளாதார சமூக காரணங்கள் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் இருவருக்குமான ஈர்ப்பு குறைய காரணமாக அமைந்து விடும். 
 
இதை நான் லீனியர் பாணியில் சொல்லியிருக்கிறோம். இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதல் கொடுக்கக்கூடிய கொண்டாட்டமான படமாக இது இருக்கும். 
 
இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பாராட்டினார்கள். குறிப்பாக இயக்குநர் அமீர் ஒரு சில திருத்தங்கள் கூறியதுடன் இன்றைய சூழலில் குடும்பங்களுடன் பார்க்கக்கூடிய இதுபோன்ற ஒரு படம் தான் வேண்டும் என்றும் கூறினார்.
 
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தை வி & டோனி இன்டர்நேஷனல் மற்றும் கேபிள் சங்கர் எண்டர்டைன்மென்ட் சார்பில் லால் தேவசகாயம் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் உலகமெங்கும் வெளியிடுகிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !!