சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையே அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் சேவை, வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக 1997ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2007ஆம் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை பாதை நீட்டிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக 2008ஆம் வேளச்சேரி - பரங்கிமலை இடையே 5 கி.மீ. தொலைவுக்குப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியில், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகத் தாமதமானது.
நீதிமன்றத்தின் தலையீட்டால், நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது பறக்கும் ரயில் பால பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்த புதிய வழித்தடம் வரும் நவம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கும் பட்சத்தில், திருவான்மியூர், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், பரங்கிமலை வழியாக தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் போன்ற இடங்களுக்கு செல்வது எளிதாகும்.