துபாயில் இருந்து வந்த ஒரு விமானம் சென்னையில் தரையிறங்க முயன்ற போது, திடீரென விமானத்தின் மீது பச்சை நிறத்தில் லேசர் லைட் அடிக்கப்பட்டதால், விமானி நிலை குலைந்ததாகவும், அதன் பின்னர் சுதாரித்து அவர் பத்திரமாக விமானத்தை தரையிறக்கியதாகவும் வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் நேற்று இரவு சென்னை வந்த விமானத்தின் மீது மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால், பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் விமானி நிலைகுலைந்ததாகவும், ஆனாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை மிகவும் பாதுகாப்பாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் விமானி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பரங்கிமலை அருகிலிருந்து விமானத்தின் மீது பச்சை நிற லேசர் லைட் அடித்தது யார் என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.