Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது! தவெகவை விமர்சித்த விசிக..!

vijay thiruma

Siva

, செவ்வாய், 29 அக்டோபர் 2024 (06:53 IST)
ஆட்சியதிகாரத்தில் பங்கு, அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது என தவெக குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள்  
27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில்  நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். 
சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார்.
 
தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர்  ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை! 
 
'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள். 
 
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர்,  'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான "பிளவுவாதத்தை" ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.
 
ஆனால், சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது.
 
அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா?  அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா? 
 
பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா? தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில்  அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை  வெடித்தது ? 
 
பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு? 
 
" கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. 
 
" திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது.
 
அவரது உரையில் வெளிப்படும் "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே!
 
 குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே! 
 
ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை.
 
"பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது.
 
'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது. 
 
ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். 
 
ஒட்டுமொத்தத்தில்,  பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியில்லை: ஹரியானா தோல்வியால் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு..!