நடிகர் விஜய், எம்ஜிஆர் குறித்து பேசியதை அதிமுக வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடந்த நிலையில், விஜய்யின் முழு உரை பெரும் பரபரப்பை அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஏற்பாடுகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
விஜய்யின் மாநாடு மிகப்பெரிய தொடக்கம் என்றும், இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை விஜய் மாநாடு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார்.
விஜய் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக கலந்து கொண்டுள்ளனர் என்றும், வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு விஜய்யின் மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும், சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.
விஜய் கட்சியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆளும் கட்சியான திமுக பாதிப்படைவதாகவும் கூறினார். மேலும், எம்ஜிஆர் குறித்து விஜய் தனது பேச்சில் சுட்டிக்காட்டியதை அதிமுக வரவேற்கிறது என்று கூறிய ஆர். பி. உதயகுமார், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பட்டம் சூட்டியதை மக்கள் ரசிக்கவில்லை என்றும், குறிப்பாக இளைஞர் சமுதாயம் கொதித்துப் போய் விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.