Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமான், மீது மானநஷ்ட வழக்கு: திருச்சி எஸ்.பி. வருண்குமார் அதிரடி அறிவிப்பு

சீமான், மீது மானநஷ்ட வழக்கு:  திருச்சி எஸ்.பி. வருண்குமார் அதிரடி அறிவிப்பு

Mahendran

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (11:55 IST)
சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திருச்சி எஸ்பி வருண்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.  இது குறித்து வருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
நான் வருண்குமார் வீரசேகரன் IPS. பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேல் உள்ள பற்று காரணமாக 2010-ம் ஆண்டு UPSC குடிமைப்பணிகள் தேர்வு எழுதினேன். அதில், அகில இந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், IPS -ஐ தேர்ந்தெடுத்தேன். 
 
2011-ம் ஆண்டு IPS தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை, சென்னையிலும் பணிபுரிந்தேன். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைபொருள் நுண்ணறிவு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளேன். 
 
தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டுகால IPS வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிளும் Outstanding Rating மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளேன்.
 
இன்று ஒரு மாவட்ட பொறுப்பில் இருந்தாலும்கூட, இராமநாதபுரத்தில் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவன் நான். எனது தகப்பனார் வழி தாத்தா ஒரு தபால் காரராக பணிபுரிந்தார். எனது தாய்வழி தாத்தா திருச்சியில் விவசாய விதை வியாபாரம் செய்து வந்தார். இப்பேர்ப்பட்ட சாமானிய சூழலிலிருந்து வந்த நான் பெண்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் போன்ற  சாமானியர்களின் பிரச்சனைகளைப் முனைப்பில் செயலாற்றி வருகிறேன்.
 
2021-ம் ஆண்டு YouTuber ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளுர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த YouTuber-ஐ கைது செய்து, பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன். 
 
சமீபத்தில், அதே YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன்.
 
நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் X தளத்தில் பரப்பினர்.
 
என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்திற்காக கொலை மிரட்டல் விடும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது.  தொடர்ந்து ஆபாச சித்தரப்பில் ஈடுபடும் சில எக்ஸ் தள கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா சந்தேகம் எழுகிறது. 
 
ஏனெனில், இவை அனைத்தும் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விசயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு Cyber Crime Wing போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள். நானும் எனது மனைவி மரியாதைக்குரிய திருமதி. வந்திதா பாண்டே IPS அவர்களும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். இந்த சவாலான பணியில் நேர்மையாகக் கடமையாற்றினால் மக்களின் நன்மதிப்புகளோடு ஒருசிலரின் பகையையும் சம்பாரிக்க நேரிடும் என்பதை நாங்கள் அறிவோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான். ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் ஓரு அளவிற்கு பாதித்துள்ளது.
 
நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த X இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது
அவர்களும் விலக முடிவு செய்துள்ளோம்.
 
எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும் நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் (Morphing) குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும்.
 
எங்கள் கையில் உள்ள பொறுப்பு, மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நாங்கள் மேற்கொண்டு வரும் பணியின் பொருட்டு இதுபோன்ற குறுக்கீடுகளைப் புறந்தள்ளுகிறோம்.  இவ்வாறு வருண்குமார் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை.!