காஞ்சிபுரம் வரதராஜ கோவிலில் தங்க பல்லி மாயமானதாக புகாரளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
வரதராஜ பெருமாள் கோவிலின் மற்றுமொரு விசேஷம் அங்குள்ள வெள்ளி பல்லி மற்றும் தங்க பல்லி சிலைகள். அவற்றை கண்டு தரிசிப்பது வளம் சேர்க்கும் என மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இந்நிலையில்தான் கோவிலில் இருந்த தங்க பல்லி மாயமாகிவிட்டதாக ரங்கராஜ நரசிம்மன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வரதராஜ பெருமாள் கோவில் சென்று சிலைகளை பார்வையிட்டதோடு, அங்கு பணிபுரியும் பட்டாச்சார்யார்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். பல்லி சிலைகளை மாற்றிவிட்டு புதிய சிலைகளை அமைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K