அரசியல் விமர்சகர் மாரிதாஸை கைது செய்தததை எதிர்த்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மாரிதாஸ் அவ்வபோது சர்ச்சையான கருத்துகளால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாரிதாஸை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரை டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகம் காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது.
திமுகவின் கொள்கையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் மிக கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் கட்சி திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிடவேண்டும் மாரிதாஸ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.