Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்கக் கூடாது…. வைகோ வேண்டுகோள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்கக் கூடாது…. வைகோ வேண்டுகோள்!
, செவ்வாய், 15 ஜூன் 2021 (15:18 IST)
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்பனை செய்யக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வைகோவின் அறிக்கை :-

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது,10.02.1937 ஆண்டில்,மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியாரால் தொடங்கப்பட்டது.பின்னர்,1969ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், குக்கிராமங்களில் 1,500 கிளைகள் உள்ளன.மேலும்,15 மண்டல அலுவலகங்களும் உள்ளன.

கிராமப்புற மக்களுக்கு, குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் முதலியவற்றை, ஐஓபி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன.

மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐ.ஓ.பி. வங்கிக் கிளை செயல்பட்டு வருகின்றது. 2005ஆம் ஆண்டு, ஐ.ஓ.பி. வங்கியை, வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, கருணாநிதி கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். எனவே, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

ஆனால், இரண்டு பொதுத்துறை வங்கிகளை, தனியாருக்கு விற்கப் போகின்றோம் என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அவை எந்த வங்கிகள் என்பது குறித்து ஆய்வு நடைபெற்றதாகவும், நான்கு வங்கிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அவற்றுள் ஒன்றாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெயரும் இருப்பது,தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுவரை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட புதிதாகத் தோற்றுவிக்காத பாஜக அரசு, ஏற்கெனவே இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க முயல்வது,பெருங்கேடு ஆகும். தனியார் புதிய வங்கிகளைத் தொடங்குவற்கு எந்தத் தடையும் இல்லை. அப்படி எத்தனையோ புதிய தனியார் வங்கிகள் தோன்றி இருக்கின்றன. அவர்களுடைய வங்கிகளில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்டணம் வசூளிக்கப்பட்டுள்ளன.மேலும்,எந்தவிதமான, வட்டித் தள்ளுபடியும் தராமல், மக்களைக் கசக்கிப் பிழிகின்றார்கள்.

ஏற்கெனவே,'பேங்க் ஆஃப் தமிழ்நாடு' என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்தார்கள். இப்போது, ஐஓபியைத் தனியாருக்கு விற்க முயல்கின்றார்கள். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாகமாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்சி முக்கொம்பை வந்தடைந்த காவிரி தண்ணீர்… விவசாயிகள் உற்சாக வரவேற்பு!