பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தற்போது அந்த கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை, திருப்பதி தேவஸ்தானத்தின் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி விட்டதால், சுமார் 2 கிலோமீட்டர் நீளமாக பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். மேலும், நேற்று ஒரே நாளில் 57 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்ததாகவும், 31,000 பேர் முடி காணிக்கை செலுத்தியதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நேரடி இலவச தரிசன வழியில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதி கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, தேவஸ்தான நிர்வாகம் கூடுதல் வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.