சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் உதயநிதி ஸ்டாலினுக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், முதலில் அமைச்சர் பதவிகளை ஏற்காவிட்டாலும் பின்னர் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சமீபகாலமாக திமுகவில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அனைத்து ப்ளெக்ஸ், பேனரிலும் அவரது படம் சின்னவர் என்ற அடைமொழியோடே வருகிறது. அமைச்சர் பதவியை தொடர்ந்து அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்க மேலிடம் மிகவும் விருப்பமாக இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொண்டர்களை கொண்டு வந்து குவிக்க மாவட்ட நிர்வாகிகள் தீவிர பணிகளில் இறங்கியுள்ளனராம். உதயநிதி அமைச்சரான பிறகு உதயநிதி தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருந்து வருகிறது.
இந்த மாநாடு முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த முடிவு திமுகவிற்கு சாதகமானதாக மாறலாம் என கணிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு உதயநிதிதான் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.