தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவின் துணை எதிர்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரும் மாநில கட்சியான அதிமுகவில் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் இடையே கட்சி ஒற்றைத் தலைமை குறித்த மோதல் எழுந்தது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் வகித்த கட்சி பொருளாளர், எதிர்கட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் கட்சியின் துணை எதிர்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.