அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார்.
அதிமுக முக்கிய தலைவரான ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில தினங்களாக அதிமுக ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பை காட்டி வருகிறார். இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பலரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டு வந்தார்.
இதனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே தொடர் மோதல் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தன்னை மிரட்டுவதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “ஓ.பன்னீர்செல்வம் என்னை சீண்டி பார்க்க வேண்டாம். கோவை செல்வராஜ் போன்ற அதிமுக வரலாறு தெரியாதவர்களை கொண்டு ஓபிஎஸ் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்.
லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டிலும், ஓபிஎஸ் வீட்டிலும் ஒரே சமயத்தில் சொத்து குவிப்பு குறித்து சோதனை நடத்தட்டும். நான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கண்டறியப்பட்டால் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். ஓபிஎஸ் வீட்டில் சொத்து சேர்த்ததாக கண்டறியப்பட்டால் அவர் விலகிக் கொள்ள தயாரா என சவால் விடுகிறேன். என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட வேண்டி வரும். பிறகு அவர் வெளியே தலை காட்டவே முடியாது” என கூறியுள்ளார்.