உத்தர பிரதேசத்தில் சிவன் கோவில் ஒன்றிற்குள் இறைச்சி துண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் என்னும் கிராமத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்து கோவில் நடை இரவு சாத்தப்பட்டுள்ளது. மறுநாள் காலை மீண்டும் வழக்கம்போல கோவிலை திறந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கிய நிலையில் அங்கு இறைச்சி துண்டுகள் சிதறி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவில் பூசாரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கிருந்த மக்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவ அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர் அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த 5 இறைச்சி கடைகளை அவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அங்கு விரைந்த போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.