திருபுவனத்தில் காவலாளி அஜித்குமார் காவல் விசாரணையில் மரணமடைந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தவெக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
திருபுவனத்தில் உள்ள மடப்புரம் கோவில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார், நகைகளை திருடியதாக சிறப்பு போலீஸ் பிரிவினர் அழைத்துச் சென்று தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் மரணமடைந்தார். இந்த வழக்கில் 5 காவலாளிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைதும் செய்யப்பட்டுள்ள நிலையில் துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மரண சம்பவத்திற்கு இரங்கலையும், காவல்துறைக்கும், திமுக அரசுக்கும் கடும் கண்டனங்களையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். மேலும் மடப்புரத்திற்கே நேரில் சென்று அஜித்குமாரின் குடும்பத்தாரை சந்தித்து ரூ.2 லட்சம் பண உதவியும் செய்தார். இந்த விசாரணை மரணம் குறித்து கண்டன போராட்டம் நடத்தப்படும் என தவெக சார்பில் அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதை தொடர்ந்து வருகிற ஜூலை 13ம் தேதி காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி விசாரணை கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையில் சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்துக் கொள்கிறாரா என்பது குறித்து கூறப்படாவிட்டாலும், சென்னையில் நடப்பதால் அவர் கண்டிப்பாக கலந்து கொண்டு பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K