மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணை மரண வழக்கில் தொடர்புடைய நிகிதா, கோவையில் சுற்றி வரும் வீடியோக்கள் அப்பகுதியில் வைரலாகி வருகிறது.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் நகைகளை திருடியதாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீஸார் அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் பலியான சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் நிகிதா அளித்த புகாரின்படி நகைகள் காணாமல் போனது உண்மையா? அதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதியப்படாமல் விசாரிக்கப்பட்டது ஏன்? என பல கேள்விகள் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கில் நிகிதா இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் நிகிதா இதற்கு முன்பு தான் பி.எட் படித்தபோதே பேராசிரியரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக 16 லட்சம் ஏமாற்றியதாகவும், பார்வெர்ட் ப்ளாக் கட்சியை சேர்ந்தவரை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் அவர் மீது மோசடி புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கோவை - பொள்ளாச்சி சாலையில் ஒரு ஓட்டலில் நிகிதா அவரது தாயாருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்த சிலர் அவரை அங்கேயே பிடித்து வைத்துக் கொண்டு காவல்துறைக்கு போன் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் யாரும் வராததால், கடைசியில் நிகிதாவை அவர்கள் விட்டுவிட்டு சென்றதாகவும், அதன்பின் நிகிதா கோவை பக்கமாக சென்றதாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
நிகிதா மீது பிடிவாரண்ட் போன்ற எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் அவரை போலீஸார் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆனால் விரைவில் நிகிதாவின் மீதான மோசடி புகார்களுக்காக அவர் கைது செய்யப்படலாம் என்றும், அதனால் அவர் தலைமறைவாக இருப்பதற்காக கோவைக்கு சென்றிருக்கலாம் என்ற ரீதியிலும் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K