Publish Date: Wed, 30 Mar 2022 (11:21 IST)
Updated Date: Wed, 30 Mar 2022 (14:03 IST)
ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? என டிடிவி கேள்வி.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அந்த துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்துத் துறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சர்கள் மாற்றம் தற்போது நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் இந்த மாற்றம் குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் திரு.ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?
சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திரு.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்? ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.