Publish Date: Wed, 27 Oct 2021 (10:43 IST)
Updated Date: Wed, 27 Oct 2021 (10:47 IST)
அதிமுகவில் சசிக்கலாவை இணைப்பது குறித்து ஓபிஎஸ் பேசியதற்கு டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சசிக்கலா மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் கருத்து குறித்து பேசியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர். சசிக்கலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து சரியான கருத்தையே கூறியுள்ளார். இறுதிமூச்சு உள்ளவரை தொடர்ந்து போராடுவோம். அதிமுகவை மீட்பதே எங்கள் இலக்கு” எனக் கூறியுள்ளார்.