தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாகவும், அதே போல் வந்தே பாரத் ரயிலும் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஃபெஞ்சால் புயல் காரணமாக கன மழை பெய்த நிலையில், மழை நீர் தண்டவாளத்தை சூழ்ந்ததால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே தண்டவாளத்திற்கு மேலே தண்ணீர் இருப்பதால் ரயில்கள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, நேற்று இரவு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தென் மாவட்டங்களில் இருந்து இன்று சென்னை எழும்பூருக்கு கிளம்ப வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ரயில்களும் இன்று பிற்பகல் சென்னையில் இருந்து புறப்படாது என்றும் அந்த ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலும் இன்று இரு மார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொச்சுவேலையில் இருந்து தாம்பரம் வரும் ரயில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் ரயில் ஆகியவை விழுப்புரத்துடன் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Edited by Mahendran