கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லை என்றாலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதியில் உள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பும் சில மாவட்டங்களில் இருந்து வெளியாகி உள்ளது. தொடர்மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சற்றுமுன் வெளியான தகவலின் படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் சிக்கல், பரவை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், முட்டம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், இந்த மாவட்டத்திலும் பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வேதாரண்யத்தில் மட்டும் இரண்டு நாட்களில் 22 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.