Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரங்கள்..!

Advertiesment
சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..  என்ன காரணம்? முழு விவரங்கள்..!

Siva

, ஞாயிறு, 19 ஜனவரி 2025 (12:25 IST)
சென்னையில் நாளை முதல் அதாவது ஜனவரி 20 முதல் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வரும் 20, 22, 24 (ஒத்திகை நாட்கள்) மற்றும் 26ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நாட்களில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
 
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் பசுமை வழி சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம், திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம், வெங்கடேச அக்ரஹாரம் தெரு, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வே சென்றடையலாம்.
 
அதேபோல் அடையாறில் இருந்து வரும் பிற வாகனங்கள், காந்தி சாலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டு ராயப்பேட்டை 1-பாயின்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வேக்கு சென்றடையலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயின்ட்டில் இடது அல்லது வலது புறமாகத் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
 
மாநகர பேருந்துகள் இடது புறமாக திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக பிராட்வே சென்றடையும். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
 
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல், வடக்கு துறைமுகம் சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை, ஐஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடது அல்லது வலது புறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்களது இலக்கை அடையலாம்.
 
அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. இதேபோல் பொதுமக்களின் வசதிக்காக அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். குடியரசு தினத்தையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள் திவ்யா.. 2026 தேர்தலில் போட்டியா?