தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த போதிலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
அதேபோல், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட 19 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொங்கல் பண்டிகை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னை திரும்புவார்கள் என்பதால், மழை நிலைமையை கண்காணித்து, அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.