கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். காலவரையற்ற இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுதும் போக்குவரத்து முடங்கியது. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு தொமுச, சிஐடியூ உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் ஓடாது என்றே கருதப்படுகிறது.
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே ஷேர் ஆட்டோ, ஆட்டோ கட்டணங்கள் ஏறியுள்ளதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக பேருந்துகள் மட்டுமே உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.