கரூர் அருகே முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி மீது அரசு வாகனம் மோதிய விபத்தில் அவரின் காலில் முறிவு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை 4.40 மணியளவில் சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்றார். அப்போது தேசிய நெடுஞ்சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்நிலையில், கரூர் தேசிய நெடுஞ்சாலை அபி பெட்ரோல் பங் அருகே முதல்வருக்கு அதிமுக மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்காக கரூர் தேசிய நெடுஞ்சாலை புத்தாம்பூர் டெக்ஸ் பார்க் அருகே தர்மலிங்கம் என்ற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வேன் டெக்ஸ் பார்க் அருகே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு மீது மோதியது. அந்த பேரி கார்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தர்மலிங்கத்தின் காலில் வேகமாக அடித்தது. இதில் தூக்கி எறியப்பட்ட காவலர் தர்மலிங்கத்தின் காலில் முறிவு ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.