குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு புரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 27 பேரை மீட்டனர்.
ஆனால், பதட்டத்தில் பள்ளத்தாக்கில் விழந்த 9 பேரை மீட்க முடியவில்லை. எனவே, அவர்கள் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். அதுமட்டுமின்றி ஒருசிலர் ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார், அதில் உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.
“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.
இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம் என பதிவிட்டுள்ளார்.