கடந்த சில மணி நேரங்களாக வாழைப்பழம் விற்கும் ஒரு பெண்மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு முதல்வரே ஓட்டு போடும்படி பெண்ணிடம் கூறி பணம் கொடுப்பதாகவும் இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்
இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவினர் விளக்கம் அளித்துள்ளனர். வாழைப்பழம் வியாபாரம் செய்யும் பெண் அன்பால் கொடுத்த ஒரு சீப்பு வாழைப்பழத்தை பெற்று கொண்டு அதற்குண்டான பணத்தை முதல்வர் கொடுத்ததாகவும், இது ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட பணம் இல்லை என்றும், வாழைப்பழத்திற்கு கொடுத்த பணத்தின் வீடியோ காட்சி தான் இது என்றும், ஆனால் அதை பெரிதுபடுத்தி முதலமைச்சர் ஓட்டுக்கு பணம் கொடுத்துவிட்டார் என்கிற ரீதியில் தவறான புரிதலோடு இந்த வீடியோ வைரலாகி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஒருசிலர் இந்த வீடியோவில் முதல்வர் ஈபிஎஸ் வாழைப்பழத்தை பெற்றுக்கொண்டதை கட் செய்துவிட்டு, பணம் கொடுத்ததை மட்டும் வைரலாக்கி வருகின்றனர் என்றும், இந்த பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்